அச்சுதாசர் Achudasar

சரியை, கிரியை, யோகம், ஞானமறிந்த மகான்
அத்வைதம் பரப்பிய அச்சுதானந்த சாமிகள்

மகான்கள், சித்தர்கள்,யோகிகள், ஞானியர் வரிசையில் 19ம் நூற்றாண்டில் ராமலிங்க அடிகளார், ராமகிருஷ்ண பரமஹம்சர்,  விவேகானந்தர், சச்சிதானந்த சாமிகள், சிவப்பிரகாசர்,  பாம்பன் சாமிகள் போன்றோர் அவதரித்தனர். 
அதேபோல் தொண்டை மண்டலத்தில் உள்ள போளூரில் 1850ம் ஆண்டு அப்பாய் என்ற பெயரில் தோன்றி, சம்பத்கிரி பிரம்ம பீடம் நிறுவியர்தான் 
ஸ்ரீ அச்சுதானந்தன் சாமிகள்.  

குழந்தை பருவத்தில் தந்தையையும், குமரன் பருவத்தில் தாயையும் இழந்தவர் அச்சுதானந்தன் (எ) அப்பாய். 
வளர்ந்து, ஆசிரியராகி, இலக்கண,இலக்கியங்களை கற்று, தமிழ், தெலுங்கு, வடமொழிகளில் புலமை பெற்றார். 
இசையிலும் புலமை பெற்று, ஆசிரியர் தொழிலை கைவிட்டு, பஜனை மந்திரம் நிறுவி,  ராமபிரானை வழிபட்டார். 

வேலூர் கஸ்பா வேங்கடகிருஷ்ணதாசர் என்ற வைணவப் பெரியவரை அப்பாய் தரிசிக்க சென்றபோது  அவரின் ஆற்றலைக்கண்டு '"அச்சுத தாசர்" என பெயர் சூட்டினார்.
கஸ்தம்பாடி 'தாயம்மை' என்பவரை அச்சுத தாசர் மணந்தாலும், இல்லறத்தில் நாட்டமின்றி,  இறைபக்தியிலேயே அதிகம் நாட்டம் கொண்டார்.

பொத்தரை  வெங்கம்மையிடம் யோகா பயின்று, 6அடி உயரத்தில் அந்தரத்தில் அட்டாங்கமாக மேலே செல்வது,நிலைத்திருப்பது, கிழே இறங்குவது என சூரியவாயு பயிற்சி செய்து வந்தார்.

நான்யார் ? தலைவன் யார்?  பிறத்தலும்,  இறத்தலும் நிகழ்வது ஏன்? 
என அறிய 15 குமார்களிடம் கேட்டறிந்து, திருப்தியில்லாததால், கடமூர்  கைலாயங்கிரியிலிருந்த குரு நிஜானந்தயோகீஸ்வரரிடம் 
 என்னை எனக்கு அறிவித்து, பிறப்பு  எனும் பெருங்கடலிலிருந்து கரையேற்ற வேண்டும். என வேண்டினார்.

குருநாதரும் தீட்சையளித்து ஆத்ம சொரூபத்தை அறியும் வழிகளை விளங்க வைத்தார் . அச்சுத தாசருக்கு 'அச்சுதானந்தன் ' என பெயரிட்டார்.
தன்னையும், ஆதாரத் தலைவனையும் கண்டு,  சிவசொரூபமாய் திகழ்ந்த அச்சுதானந்தர்,  சீடர்களிடம் பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டேன். 
ஜீவன் முக்தியடைந்தேன்.  இனிபெற ஒன்றுமில்லை என்றார். 

அச்சுதானந்தர் 327 கீர்த்தனைகள் கொண்ட அத்வைத கீர்த்தனாந்தலஹரி , நிஜானந்தப்பதிகம்,  தோத்திர  இசைப்பாடல், அத்வைத ரச மஞ்சரி,  
துருவ சரித்திரம், பிரகலாத சரித்திரம், சக்குபாய்  சரித்திரம்,  தியானானுபூதி, சன்மார்க தர்ப்பணம் ஆகிய 9 நூல்களை எழுதி உள்ளார்.

இவை அனைத்தும் அத்வைத அனுபவ நூல்களாகும். இவர் இயற்றிய பாடல்களில் சரியை, கிரியை, யோகம், ஞானங்களினால் ஏற்படும் அற்புத நிலைகளை அறியலாம்.  துவிதம், வசிட்டாத்துவைதம், அத்வைதம் ஆகிய மூன்று நெறிகளில் அச்சுதானந்தர் அத்வைதத்தை ஆந்திரா வடஆற்காடு, தென்னாற்காடு, சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரப்பினார்.

அவர் பாடினால் ஆடு, மாடுகள் அசைவற்று நின்றதும்,  நில் என்றால் ரயில் நின்றதும் அப்போதைய ஆச்சர்ய சம்பவங்கள். 
காலம் பொன்போன்றது. அதனை வீணாக்காமல், ஆண்டவனிடம் சரணமடைந்து பெருவாழ்வு பெறுங்கள் என அடியவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வேலூர் மாவட்டம், கண்ணமங்கலம், கீழ் வல்லம் நாகநதிகையோரம் 'யாவரும் எம்மை நோக்குவீர்களாக' எனக்கூறி பத்மாசனத்துடன் அமர்ந்து 1902ம் ஆண்டு கார்த்திகை 12ம் தேதி வியாழனன்று காலை 10 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். அதே இடத்தில், அதே நிலையில் தற்காலிக சமாதி எழுப்பப்பட்டது. 

ஓராண்டுக்கு பிறகு சமாதி மீது கோயில் எழுப்ப பொதுமக்கள் சமாதி கற்களை அகற்றிய போது அச்சுதானந்தரின் திருமேனியை தரிசித்தனர். 
உடல், மாலை வாடவில்லை. நெற்றியில் வியர்வை இருந்தது.  வியர்வையை துடைக்க, துடைக்க வந்தது கண்டு ஆச்சரியமடைந்தனர் .

சிவப்பிரகாச சித்தர், குகைநமச்சிவாயர், குரு நமச்சிவாயர்,தோப்பா சாமிகள் போல் ஜீவசமாதி எய்தியதால் பக்தர்கள் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாத சுவாதி நட்சத்திர நாளில் பொதுமக்களும், சீடர்களும் 'குருபூஜை' செய்து வணங்குகின்றனர். 
மாதந்தோறும் சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

நடப்பு ஆண்டான சார்வரி கார்த்திகையில் சுவாதி நட்சத்திரம் 2020 டிசம்பர் 10ல் வருகிறது. டிசம்பர் 10,11 என இருநாளும் 118வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.  
இதில் தமிழகம் ஆந்திர மாநில சீடர்களும், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர்.       

Comments